வணக்கம் !!!

வணக்கம்!!!
நலம். நாடுவதும் நலமே...............

இயற்கையுடன் இணைந்து ஆரோக்கியமாக வாழ்க வளமுடன் !


Tuesday, July 22, 2014

சிவ ரகசியம்

சிவ ரகசியம்
குருவடி பணிந்து
இ.லம்போதரன் MD
www.knowingourroots.com
இதிகாசம் என்றால் 'இப்படி நடந்தது' என்று பொருள் படும். இதிகாசங்கள் இரண்டு என்பதே வழமையாக எல்லோரும் அறிந்தது. இவை இராமாயணம், மகாபாரதம் என்பனவாம். இவற்றை விட மூன்றவாது இதிகாசம் ஒன்று உண்டு என்பது பலரும் அறியாத ஒன்று. இது சிவ ரகசியம் எனப்படும் இதிகாசமாம். 
இதுவும் மகாபாரதம் போல ஒரு இலட்சம் சுலோகங்கள் கொண்ட நூல். இதைசுப்பிரமணியர் தமது பிதாவாகிய சிவபெருமான் முன்னர் உமாதேவிக்குச் சொன்ன இந்த சிவ ரகசியத்தை ஜைகீவஷ்யர் என்ற ரிஷிக்கு உபதேசித்தார். ஜைகீவஷ்யர் என்பது வியாசர் என்று இரமணாசிரம நூல்கள் கூறுகின்றன. அவர் இதை சூத முனிவருக்கு உபதேசித்தார். பௌராணிகரான சூத முனிவர் சிவ ரகசியத்தை நைமிசாரண்ய முனிவர்களுக்கு உபதேசித்தார். இவ்விதமாக இந்த இதிகாசம் இவ்வுலக மக்களுக்கு வந்தடைந்தது. 

இராமாயணத்தில் ஏழு காண்டங்கள் உள்ளன;மகாபாரத்தில் பதினெட்டு பர்வங்கள் உள்ளன;இதேபோல சிவரகசியத்தில் பன்னிரண்டு அம்சங்கள் உள்ளன
இதில் ஒன்பதாவது அம்சத்தில் கலியுகத்தில் வாழ்ந்த சிவ பக்தர்களுடைய சரித்திரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதிலே எங்களுடைய அறுபத்துமூன்று நாயன்மார்களுடைய வரலாறும் சொல்லப்படிருக்கின்றது. இதேபோல பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹரதத்த சிவாச்சாரியாருடைய வரலாறும் இங்கு கூறப்படுகின்றது. இவர் வைணவாராக இருந்து சைவராக ஆனவர். பழுக்க காய்ச்சிய இரும்பு முக்காலியில் உட்கார்ந்துகொண்டு சிவனே பரம் என்று இருபத்திரண்டு காரணங்களைக்கூறி நிரூபித்தவர். இப்படி இவர் கூறிய பாடல் சுலோக பஞ்சகம் எனப்படும். ஆதி சங்கரரின் வரலாறும் சிவரகசியத்தில் சொல்லப்படுகின்றது. இதிலே விசேடம் என்னவென்றால் பிற் காலத்திலே நிகழப்போகின்ற இந்த அடியார்களுடைய சரிதங்களை எல்லாம் ஞானதிருஷ்டியால் முற்கூட்டியே விவரித்திருக்கின்றது இந்த சிவரகசியத்தில். இதேபோல ஆகமங்களிலும் பின்னாளில் வரப்போகின்ற சம்பந்தர் முதலான நாயன்மார்களின் தேவார திருவாசகங்களைப் பற்றிய குறிப்புகளும் அவை எந்தெந்த சந்தர்ப்பங்களிலே பாடப்படவேண்டும் என்ற குறிப்புகளும் காணப்படுகின்றன. 
உதாரணமாக சங்கரரின் வரலாற்றைக் கூறும்போது 'சங்கரர் என்ற பெயருடன் மலையாள தேசத்தில் சசலம் என்னும் காலடியில் ஒரு பிரமணோத்தமர் ஒரு உத்தமமான பிராமணப் பெண்ணுக்குப் பிறக்கப் போகின்றார்' என்று ஆரம்பிக்கின்றது.
'கேரளே சசலக்ராமே விப்ரத்ந்யாம் மதம்சஜ
பவிஷ்யதி மஹாதேவி சங்கராக்யோ த்விஜோத்தம;'  
இதேபோல கலியுக்துக்கு முந்திய சிவபக்தர்களுடைய சரித்திரங்கள் பின்வரும் நூல்களில் கூறப்பட்டுள்ளன.
1. கந்தபுராணம் - உபதேசகாண்டம்
2. கூர்ம புராணம் - தமிழில் பாடியது அதிவீரராம பாண்டியன்
3. வாயு சம்ஹிதை - தமிழில் பாடியது குலசேகர வரகுணராம பாண்டியன்
4. பிரம்மோத்திர காண்டம் - தமிழில் பாடியது வரதுங்கராம பாண்டியன்
5. காஞ்சிப் புராணம் - சிவஞானசுவாமிகள் பாடியது
மகாபாரதத்துக்கு இதயத்தானமாக பகவத்கீதை இருப்பதுபோல இந்தசிவரகசியத்தின் இதயத்தானமாக ரிபு கீதை விளங்குகின்றது. சிவரகசியத்தில் ரிபு கீதை முன்னர் பரமசிவனால் ரிபு முனிவருக்கும் பின்னர் ரிபு முனிவரால் திருக்கேதாரத்தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டது எனக்கூறப்படுகின்றது. சிவரகசியத்தில் ரிபு கீதை 50 அத்தியாயங்களில் 2493 சுலோகங்களில் சொல்லப்படுள்ளது. இதை திருவிடைமருதூர் பிக்ஷு சாஸ்திரி தமிழில் 44 அத்தியாயங்களில் 1924 பாடல்களில் பாடியுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டில் நம்மிடையே வாழ்ந்த ஜீவன் முத்தரான திருவண்ணாமலை இரமண மகரிஷி அவர்கள் இரிபுகீதையை பாராயணம் பண்ணுமாறு பலருக்குச் சொன்னதோடு தாமே சில பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து அவற்றை பாராயணம் பண்ண ஊக்குவித்திருக்கின்றார். சம்பூர்ணம்மாள் என்ற அம்மையார் தனக்குப் பாடல்களின் பொருள் விளங்கவில்லை என்று சொல்ல, ரமணர்'பொருள் புரியாவிட்டாலும் பாராயணம் செய்வதால் மிகுந்த பலன் உண்டு' என்று சொல்லி ஊக்குவித்தார். இன்று ரிபு கீதை இரமணாசிரம்த்தின் வெளியீடாக பல பதிப்புகள் வெளிவந்துள்ளது.

No comments: