வணக்கம் !!!

வணக்கம்!!!
நலம். நாடுவதும் நலமே...............

இயற்கையுடன் இணைந்து ஆரோக்கியமாக வாழ்க வளமுடன் !


Saturday, August 2, 2014

காயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்

காயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்
குருவடி பணிந்து
இ.லம்போதரன் MD
www.knowingourroots.com

காயத்திரி மந்திரத்தைப் பலர் சொன்னாலும் அதன் பொருள் என்ன என்று பலருக்குத் தெரியாது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதி தான்பாடிய பாஞ்சாலி சபதத்தில் பின்வருமாறு பாடியுள்ளான்.
"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்
அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக"

செங்கதிர்த்தேவன் என்பது சூரியனைக் குறிக்கும் செங்கதிர்த்தேவன்,காய்கதிர்செல்வன்வெய்யோன்ஞாயிறுசெஞ்சுடரோன்கதிரவன் என்று சூரியனுக்கு பல பெயர்கள் உள்ளன.
 எமது சைவம் சுட்டுகின்ற சூரியன்கள் பல.
  1. பௌதிக சூரியன்: ஒன்று எமது பூமிக்கு ஒளி கொடுக்கும் எரிகோளமான சூரியன். கிரகங்கள் எல்லாம் இந்த சூரியனைத்தான் நீள் வட்டப்பாதையில் வலம் வருகின்றன. இது பௌதிக சூரியன் இதற்கு உயிரோ அல்லது உணர்வோ இல்லை. ஆனாலும் இயற்கையில் இறை வெளிப்பட்டு நிற்கும் நிலம்நீர்,நெருப்புகாற்றுஆகாயம்சூரியன்சந்திரன்உயிர்கள் என்றஅஷ்ட மூர்த்தங்களில் ஒன்றாக இந்தப் பௌதிக சூரியனைச் சைவம் கூறுகின்றது.
"மண்ணோடு நீர் அனல்காலோடு ஆகாயம் மதிஇரவி
எண்ணில்வரும் இயமானன்....."                                    
-சம்பந்தர் தேவாரம்-
இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமானனாய் எறியும் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாசமாய் அட்ட மூர்த்தி யாகி...”                                                                                                                    
-திருநாவுக்கரசர் தேவாரம்-
இதே போல வைணவர்களும் சூரியனை விஷ்ணுவின் நவ வெளிப்பாடுகளில் ஒன்றாகக் காண்கின்றார்கள் என்பது பின்வரும் நம்மாழ்வார் திருமொழியில் இருந்து தெரிகின்றது.
 'நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்'
நம்மாழ்வார் ஒன்பதாம் திருமொழி- 
  2. சூரிய தேவன்: இந்த பௌதிக சூரியனுக்கு அதி தெய்வமாக உள்ள தேவதை சூரிய தேவன். இவனையே சோதிட நூல்கள் நவக்கிரகங்களில் ஒன்றாக மொழிகின்றன. கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நவக்கிரகங்களில் உள்ள சூரியன் இவரே. கிரக வழிபாட்டை ஏற்றுப் பலன் தரும் சூரியனும் இவரே.
 3. துவாதச ஆதித்தர்கள்: இதைவிட துவாதச ஆதித்யர்கள் என்று பன்னிரு சூரியர்கள் உள்ளார்கள். எமது சூரியக் கிரகத்துக்கும் அதன் அதி தெய்வமான சூரிய தேவனுக்கும் சுழற்சி முறையில் மாதம் ஒருமுறை அதிபதியாக வந்து வழிகாட்டி ஒளி காட்டும் தேவர்கள் இவர்கள்.
வைகத்தன்விவச்சுதன்மார்த்தாண்டன்பாற்கரன்
இரவிஉலோகப்பிரகாசன்உலோகசாட்சி
திரிவிக்கிரமன்ஆதித்தன்சமித்திரன்துவட்டா
அங்கிசமன் என்ப பன்னிரண்டு ஆதித்தர்

என்று பன்னிரண்டு ஆதித்தர்களை திவாகர நிகண்டு கூறுகின்றது.
             பேரூழிக் காலத்தில் இப்பன்னிரண்டு ஆதித்தர்களும் நெருங்கி வர உலகத்தொகுதியை மூழ்கடித்திருக்கின்ற பிரளய வெள்ளத்தின் மத்தியிலிருந்து அக்கினி உருவாகும். இதையே வடமுகாக்கினிஎன்று சைவம் கூறுகின்றது. இன்றைய அண்டவியல் விஞ்ஞானமும் அண்டத்தொகுதிகளின் பேரொடுக்கத்தில் (Big Crunch) கோளத்தொகுதிகள் நெருங்கி வரவர அவற்றின் வெம்மை அதிகரித்து அக்கினி பிறக்கும் என்றே கூறுகின்றது.
 4. அப்பிராகிருத சூரியன்இவ்வாறு இந்தப் பிரகிருதியில் உள்ள அண்டத்தொகுதிகளின் கோடிக்கணக்கான சூரியர்களுக்கு ஒளி கொடுக்கும் சூரியனை அப்பிராகிருத சூரியன் என்பர். அப்பிராகிருத சூரியன் என்றால் இந்தப் பௌதிகத்திற்கு அப்பாற்பட்ட சூரியன் என்று பொருள். இந்த அப்பிராகிருத சூரிய மண்டலத்தையே இறப்பின் பின் ஒளிமார்க்கத்தில் செல்லும் உயிர்கள் கடந்து செல்கின்றன.
இந்த அப்பிராகிருத சூரியனையே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரும் பாடியுள்ளார்.
இருள் அகற்றும் எறிகதிரோன் மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான்
-பெரியாழ்வார் திருமொழி 414
இந்த அப்பிராகிருத சூரியனையே சைவ நாயன்மார்களில் ஒருவரான அப்பர் சுவாமிகளும் பாடியுள்ளார்.
அங்கதிரோன் அவனை அண்ணலாக் கருத வேண்டா
வெங்கதிரோன் வழியே போவதற்கு அமைந்து கொள்மின்
அங்கதிரோன் அவனை உடன் வைத்த ஆதிமூர்த்தி
செங்கதிரோன் வணங்கும் திருச்சோற்றுத் துறையனாரே
-திருநாவுக்கரசர் தேவாரம்
 5. சிவசூரியன்: அண்ட சராசரங்கள் எங்குமுள்ள பல்லாயிரக் கணக்கான ஒளி முதல்களுக்கு ஒளி கொடுப்பது ஒரே இறைவனே. இதை சிவசூரியன் என்று சைவம் சொல்ல சூரிய நாராயணன் என்று வைணவம் சொல்லுகின்றது. இவ்வாறு சைவர்கள் சிவனை ஒளிமுதல்களுக்கெல்லாம் ஒளிமுதலான  சிவசூரியனாக வழிபடுகின்றனர். இதையே சிவஞானசித்தியாரும் பின்வருமாறு கூறும்.
”நாயகன் கண் நயப்பால் நாயகி புதைப்ப, எங்கும்
பாய் இருள் ஆகிமூட, பரிந்து உலகினுக்கு நெற்றித்
தூய நேத்திரத்தினாலே சுடர் ஒளி கொடுத்த பண்பின்
தேயம் ஆர் ஒளிகள் எல்லாம் சிவன் உருத் தேசது என்னார்
  • -சிவஞானசித்தியார் 72
இந்த இறையையே வைஷ்ணவர்கள் சூரிய நாராயணனாக வழிபடுகின்றனர்.
” பிரபாஸ்மி சசி ஸூர்யயோ”
”சூரிய சந்திரர்களின் ஒளி நானே”    
-பகவத் கீதை 7:08

நமது தினசரி ஆத்மார்த்த சிவபூசை சூரிய பூசையுடன் தொடங்கி சண்டேச பூசையுடன் நிறைவு பெறுகின்றதுஇதை சூர்யாதி சண்டாந்த பூசை என்பார்கள். இந்த சூரிய வழிபாடுகள் வெறும் பௌதிக நெருப்புக் கோளமான, உயிரற்ற, உணர்வற்ற, சடமான சூரியனுக்கு அல்ல; இங்கு வெளிப்பட்டு நிற்கும் இறைவனுக்கேயாம்.காயத்திரி மந்திரமும் இந்த சூரியனையே துதிக்கின்றது. அப்பர் சுவாமிகளும், நம்மாழ்வாரும் பாடிய சூரியனும் இதுவே.ஆதலால்தான்
'அங்கதிரோன் அவனை அண்ணலாக் கருத வேண்டா'
என்று அப்பர் பாடியிருக்கின்றார்,
காயத்திரி மந்திரத்தின் பொருள் சிவனே என்று சிவனை முழுமுதற் கடவுளென்பதற்கு கூறும் இருபத்திரண்டு காரணங்களில் முதலாவது காரணமாக அப்பைய தீக்ஷிதர் பாடிய சுலோக பஞ்சகம்கூறுகின்றது.
“ காயத்ரீ வல்லபத்சத்வாத்”
'உயர் காயத்திரிக்குப் பொருளாகலின்'

என்பது இதற்குச் சிவஞான சுவாமிகள் செய்த தமிழ் மொழிபெயர்ப்பு.  
.

Tuesday, July 22, 2014

சிவ ரகசியம்

சிவ ரகசியம்
குருவடி பணிந்து
இ.லம்போதரன் MD
www.knowingourroots.com
இதிகாசம் என்றால் 'இப்படி நடந்தது' என்று பொருள் படும். இதிகாசங்கள் இரண்டு என்பதே வழமையாக எல்லோரும் அறிந்தது. இவை இராமாயணம், மகாபாரதம் என்பனவாம். இவற்றை விட மூன்றவாது இதிகாசம் ஒன்று உண்டு என்பது பலரும் அறியாத ஒன்று. இது சிவ ரகசியம் எனப்படும் இதிகாசமாம். 
இதுவும் மகாபாரதம் போல ஒரு இலட்சம் சுலோகங்கள் கொண்ட நூல். இதைசுப்பிரமணியர் தமது பிதாவாகிய சிவபெருமான் முன்னர் உமாதேவிக்குச் சொன்ன இந்த சிவ ரகசியத்தை ஜைகீவஷ்யர் என்ற ரிஷிக்கு உபதேசித்தார். ஜைகீவஷ்யர் என்பது வியாசர் என்று இரமணாசிரம நூல்கள் கூறுகின்றன. அவர் இதை சூத முனிவருக்கு உபதேசித்தார். பௌராணிகரான சூத முனிவர் சிவ ரகசியத்தை நைமிசாரண்ய முனிவர்களுக்கு உபதேசித்தார். இவ்விதமாக இந்த இதிகாசம் இவ்வுலக மக்களுக்கு வந்தடைந்தது. 

இராமாயணத்தில் ஏழு காண்டங்கள் உள்ளன;மகாபாரத்தில் பதினெட்டு பர்வங்கள் உள்ளன;இதேபோல சிவரகசியத்தில் பன்னிரண்டு அம்சங்கள் உள்ளன
இதில் ஒன்பதாவது அம்சத்தில் கலியுகத்தில் வாழ்ந்த சிவ பக்தர்களுடைய சரித்திரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதிலே எங்களுடைய அறுபத்துமூன்று நாயன்மார்களுடைய வரலாறும் சொல்லப்படிருக்கின்றது. இதேபோல பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹரதத்த சிவாச்சாரியாருடைய வரலாறும் இங்கு கூறப்படுகின்றது. இவர் வைணவாராக இருந்து சைவராக ஆனவர். பழுக்க காய்ச்சிய இரும்பு முக்காலியில் உட்கார்ந்துகொண்டு சிவனே பரம் என்று இருபத்திரண்டு காரணங்களைக்கூறி நிரூபித்தவர். இப்படி இவர் கூறிய பாடல் சுலோக பஞ்சகம் எனப்படும். ஆதி சங்கரரின் வரலாறும் சிவரகசியத்தில் சொல்லப்படுகின்றது. இதிலே விசேடம் என்னவென்றால் பிற் காலத்திலே நிகழப்போகின்ற இந்த அடியார்களுடைய சரிதங்களை எல்லாம் ஞானதிருஷ்டியால் முற்கூட்டியே விவரித்திருக்கின்றது இந்த சிவரகசியத்தில். இதேபோல ஆகமங்களிலும் பின்னாளில் வரப்போகின்ற சம்பந்தர் முதலான நாயன்மார்களின் தேவார திருவாசகங்களைப் பற்றிய குறிப்புகளும் அவை எந்தெந்த சந்தர்ப்பங்களிலே பாடப்படவேண்டும் என்ற குறிப்புகளும் காணப்படுகின்றன. 
உதாரணமாக சங்கரரின் வரலாற்றைக் கூறும்போது 'சங்கரர் என்ற பெயருடன் மலையாள தேசத்தில் சசலம் என்னும் காலடியில் ஒரு பிரமணோத்தமர் ஒரு உத்தமமான பிராமணப் பெண்ணுக்குப் பிறக்கப் போகின்றார்' என்று ஆரம்பிக்கின்றது.
'கேரளே சசலக்ராமே விப்ரத்ந்யாம் மதம்சஜ
பவிஷ்யதி மஹாதேவி சங்கராக்யோ த்விஜோத்தம;'  
இதேபோல கலியுக்துக்கு முந்திய சிவபக்தர்களுடைய சரித்திரங்கள் பின்வரும் நூல்களில் கூறப்பட்டுள்ளன.
1. கந்தபுராணம் - உபதேசகாண்டம்
2. கூர்ம புராணம் - தமிழில் பாடியது அதிவீரராம பாண்டியன்
3. வாயு சம்ஹிதை - தமிழில் பாடியது குலசேகர வரகுணராம பாண்டியன்
4. பிரம்மோத்திர காண்டம் - தமிழில் பாடியது வரதுங்கராம பாண்டியன்
5. காஞ்சிப் புராணம் - சிவஞானசுவாமிகள் பாடியது
மகாபாரதத்துக்கு இதயத்தானமாக பகவத்கீதை இருப்பதுபோல இந்தசிவரகசியத்தின் இதயத்தானமாக ரிபு கீதை விளங்குகின்றது. சிவரகசியத்தில் ரிபு கீதை முன்னர் பரமசிவனால் ரிபு முனிவருக்கும் பின்னர் ரிபு முனிவரால் திருக்கேதாரத்தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டது எனக்கூறப்படுகின்றது. சிவரகசியத்தில் ரிபு கீதை 50 அத்தியாயங்களில் 2493 சுலோகங்களில் சொல்லப்படுள்ளது. இதை திருவிடைமருதூர் பிக்ஷு சாஸ்திரி தமிழில் 44 அத்தியாயங்களில் 1924 பாடல்களில் பாடியுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டில் நம்மிடையே வாழ்ந்த ஜீவன் முத்தரான திருவண்ணாமலை இரமண மகரிஷி அவர்கள் இரிபுகீதையை பாராயணம் பண்ணுமாறு பலருக்குச் சொன்னதோடு தாமே சில பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து அவற்றை பாராயணம் பண்ண ஊக்குவித்திருக்கின்றார். சம்பூர்ணம்மாள் என்ற அம்மையார் தனக்குப் பாடல்களின் பொருள் விளங்கவில்லை என்று சொல்ல, ரமணர்'பொருள் புரியாவிட்டாலும் பாராயணம் செய்வதால் மிகுந்த பலன் உண்டு' என்று சொல்லி ஊக்குவித்தார். இன்று ரிபு கீதை இரமணாசிரம்த்தின் வெளியீடாக பல பதிப்புகள் வெளிவந்துள்ளது.